உண்மையில், மாற்றம் இல்லாமல் எதுவும் இங்கே இயங்கவில்லை. நேற்று பார்த்த சூரியனில் இருந்து இன்று பார்க்கும் சூரியன் மாறுபட்டுத்தான் இருக்கிறது. இந்தத் தருணம் புதியது. சென்ற கணத்தில் இல்லாதவிதமாக எங்கோ ஓர் இலை உதிர்ந்திருக்கும். எங்கோ ஒரு விதை முளைத்திருக்கும். இந்தத் தருணத்தில், சென்ற வருடமோ, நேற்றோ, ஏன் கடந்து போயிற்றே ஒரு நொடி அதைக்கூட உங்கள் அனுபவத்தில் உணர இயலாது.
உற்சாகமோ, சலிப்போ எதுவானாலும் அது உங்கள் மனதின் உருவாக்கம்தான். நீங்கள் மனதால் வாழ்ந்துகொண்டு இருப்பதால், நேற்று செய்ததையே திரும்பத் திரும்பச் செய்வது போன்ற ஓர் உணர்வு உங்களைத் தாக்குகிறது.
நேற்று என்பது நினைவு. நேற்று மேகங்கள் எப்படி எங்கெங்கே இருந்தன என்பதை வானம் பதிவுசெய்து வைத்துக்கொள்வது இல்லை. எவ்வளவு அலைகளைக் கரை மீது மோதினோம் என்று கடல் எழுதிவைத்துக்கொள்வது இல்லை. பிரபஞ்சத்தில் எங்கு பார்த்தாலும், நிகழ்வுகள் அதிகபட்சம் தடயங்களைப் பதிவுசெய்துவிட்டுப் போகின்றனவே தவிர, நினைவுகளாக சுமையாகி அழுத்துவதே இல்லை.
இயற்கையில் எதுவும் பழையது இல்லை. ஒவ்வொன்றும் புதியதுதான். விஞ்ஞானமும் அதையேதான் சொல்கிறது. ஒரு பாறைகூட, அதற்குரிய அதிர்வுகளை வெளிப்படுத்தித் தன்னைக் கணத்துக்குக் கணம் புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது.
புதன், 6 ஜனவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக